காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித்தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வரைவுத்திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல்செய்தது.

அதில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள், பணிகள் என்ன, அதிகாரம், தலைவர், நிர்வாகச்செலவு ஆகியவை குறித்து வரைவு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:

1. காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண வாரியம் அல்லது ஆணையம் அல்லது குழு இந்தமூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும்

2. காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தும் அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும்.

3. காவிரி ஆணையத்தின் தலைவரை மத்தியஅரசு நியமிக்கும். அந்தத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார். பொறியியல் துறையில் வல்லுனத்துவம் பெற்றவராகவோ அல்லது மூத்த ஐஏஎஸ் அதிகாரியாகவோ தலைவராக நியமிக்கப் படுவார்.

4. காவிரி விவகாரத்தில் தொடர்புடைய தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு பகுதி நேர உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.

5. இந்த அமைப்பின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவுரையின்படி, அணைகள், நீர்தேத்கங்கள் செயல் படுத்தப்படும்.

6. ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதமும், அணைகளில் உள்ள நீரின்இருப்பு எவ்வளவு என்பதை இந்தக்குழு ஆய்வு செய்யும்.

7. இந்த அமைப்பின் நிர்வாகச் செலவு, தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் ஊதியம், நிர்வாகச்செலவு ஆகியவற்றில் 80 சதவீதத்தைத் தமிழகமும், கர்நாடகமும் தலா 40 சதவீதம் என பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரள மாநிலம் 15 சதவீதத்தையும், புதுச்சேரி 5 சதவீதமும் பங்களிப்பாக அளிக்கவேண்டும்.

8. இந்த அமைப்பு அணைகளில் உள்ள நீர் இருப்பைக் கண்காணித்தல், நீரை எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீரைத்தீர்ப்பின் அடிப்படையில் பகிர்ந்தளித்தல், காவிரிநீர் பங்கீட்டை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரும். அணைகளில் உள்ள நீரைக்கண்காணித்து, நீர் திறந்துவிடுதலை கண்காணிக்கும்.

9. இந்தக் குழுவில் மொத்தம் 10 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

10. காவிரி நதிநீர் பங்கீட்டுக்குழுவில் இருவர் முழுநேர உறுப்பினர்கள், இருவர் பகுதிநேர உறுப்பினர்களாகவும், மாநிலத்துக்கு ஒருவர் எனவும் இருப்பார்கள். இதில் மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இடம் பெறுவார்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இதுஇருக்கும் என வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தவழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வரும 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

 

Leave a Reply