குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என பாஜக மூத்ததலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ஓம்சக்தி விநாயகர் ஆலயத்தில், அக்கட்சி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிமுடிவில் பேசியவர், தமிழக பாஜக தலைவரை ஒருமித்த கருத்தோடு தேர்வுசெய்வோம் எனவும் இது தொடர்பான அறிவிப்பை பாஜக மேலிடம் ஒருவாரத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச்சட்டம் பற்றி திமுக மக்களிடையே அவதூறு பரப்பி, சட்ட-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக இல.கணேசன் குற்றம்சாட்டினார். முதல்வராக வேண்டுமென்ற ஸ்டாலினின் கனவு நிறைவேறாததால், திமுக.,வினர் இவ்வாறு செய்வதாக சாடினார்.


தொடர்ந்து பேசிய அவர், ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை என்றும் அவ்வாறு செய்வது தேவையற்றது” எனவும் குறிப்பிட்டார். இஸ்லாம் மதத்தில் உள்ள பெரியவர்கள் இச்சட்டம் தொடர்பாக இளைஞர்களுக்கு எடுத்துரைத்து, அறிவுரைகூற வேண்டும் எனவும் இல.கணேசன் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானை விட இந்தியாவில் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும், இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் யாராவது ஒருவர் உயர் பதவிக்குவர முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், இந்தியாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கினார் என இல.கணேசன் தெரிவித்தார்.

Comments are closed.