ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தார்.
பாஜக சட்டப்பேரவைக் குழுக்கூட்டம் குழுவின் தலைவர் எடியூரப்பாவின் தலைமையில் பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள் கிழமை நடந்தது.  கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் குறித்து பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த் லிம்பாவளி கூறியது:-

கர்நாடகத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலைகுறித்து விவாதிக்கப் பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, கூட்டணி அரசுதானாகவே கவிழும் நிலையை அடைந்துள்ளது என்ற கருத்து பொதுவாக அனைத்து எம்எல்ஏ.,க்களாலும் கூறப்பட்டது.

கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக எதுவும் செய்ய வில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ், மஜத கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பாஜக மீது முன்னாள் முதல்வர் சித்தராமையா சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை. இக்குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 13 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கையில் எங்களது பங்களிப்பு எதுவுமில்லை.

காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பதவிவிலகியுள்ளதை தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து சிறுபான்மை அரசாகியுள்ளது. எனவே, முதல்வர் குமாரசாமி தனதுபதவியை ராஜிநாமா செய்யவேண்டும். குமாரசாமியின் ராஜிநாமாவை கேட்டு மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை 9) போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தார்மீக அடிப்படையில் ஆட்சியில் நீடிக்கும் அருகதையை இந்த அரசு இழந்துள்ளது.

பாஜக சட்டப் பேரவைக் குழுவின் கூட்டம் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அக்கூட்டத்தில் அரசியல் நிலவரங்கள்குறித்து மீண்டும் விவாதித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம்.

சுயேச்சை எம்எல்ஏக்கள் எச்.நாகேஷ், ஆர்.சங்கர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.

Comments are closed.