ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதிலும், மிகக் குறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் உலக புற்று நோய் தினம் திங்கள் கிழமை (பிப். 4) கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ” இன்று உலக புற்று நோய் தினம். புற்றுநோயை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிவதிலும், அதற்கு மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்வதிலும் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்நாளில் நினைவுப் படுத்த விரும்புகிறேன்.  தரமான மருத்துவ சேவையை தருவதற்காகவும், புற்று நோய் இல்லாத வாழ்க்கையை உறுதிசெய்யவும் “ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

புற்று நோயுடன் போராடி வெற்றிபெற்று மறுவாழ்க்கை வாழ்பவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பல லட்சக்கணக்கானோருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்கின்றனர். புற்றுநோய்க்கான சிகிச்சைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர்களை பாராட்ட வேண்டும். அவர்களது முயற்சி உலகை ஆரோக்கியமானதாக மாற்றும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply