தன்னை கொலை செய்துவிடுவதாக அதிமுக.,வினர் மிரட்டுவதாக துறை முகம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.

பழ.கருப்பையா வீடுமீது நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில், கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கி யுள்ளது. துறைமுகம் சட்டசபைத் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பழ.கருப்பையா. துக்ளக் ஆண்டுவிழாவில் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் பேசியதால் இவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கடந்த புதன்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதையடுத்து, பழகருப்பையா கடந்த வியாழக்கிழமை தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச் சாட்டுகளையும் அவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை மனதளவில் ராஜினாமா செய்துவிட்டேன். என் பேச்சு தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பும் கிடைக்க வில்லை. நான் வெளிப்படையாக பேசுபவன். அதனால் தான் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

தற்போது கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அதிகாரிகளுடன் கைகோர்த்து கொண்டு செயல்படுகின்றனர். தாதுமணல் உள்ளிட்டவற்றில் அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. லஞ்சம் என்பது பெரியவிஷயமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்

பழ. கருப்பையா. ஊடகங்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்தநிலையில் பழ.கருப்பையா ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்றிரவு 11 மணிக்கு குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில்வந்த மர்ம நபர்கள் அவரது வீடு மீது சரமாரியாக கல்வீசி தாக்கியதுடன், அவரை வெளியேவரும்படி அழைத்துள்ளனர். பழ.கருப்பையா வராததால் அங்கிருந்த அவரதுகார் மற்றும் வீட்டு ஜன்னல், கதவுகளை உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.

பழ.கருப்பையா தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும்கண்டனம் தெரிவித்தார். தமிழக அரசு பழ.கருப்பையாவுக்கு முழுபாதுகாப்பை அளிக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் எந்ததுறையிலும் வளர்ச்சி ஏற்படவில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

Leave a Reply