கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுசெய்ய வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை, தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆளுநர் பன் வாரிலால் புரோகித்  ஆய்வுசெய்தார். முதலில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் மக்கள்பிரதிநிதிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனையில் ஈடுப்பட்டார். 

அதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களுடன் அவர் ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ஆளுநர் அதிகார வரம்பினை மீறி செயல்படுவதாகக் கூறி, அவர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகையினை முற்றுகையிட முயன்ற தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

இதன் காரணமாக அங்கு தொடர்ந்துபதற்றம் நிலவுகிறது.  முன்னதாக ஆளுநரின் திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது என்று  திருமாவளவன் கூறியுள்ளார். 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply