எனது அரசின் சாதனைகளைத் தெரிவிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. ஏனெனில், மக்களுக்கு ஆற்றும் பணிகளை சாதனைகளாக என்றும் நான் கருதியதில்லை; சேவையாகவே கருதுகிறேன். உண்மையில், இந்த இரண்டாண்டு காலத்தில் உங்களுக்காக (மக்கள்) மேற்கொண்ட பணிகளை பட்டியலிடுவதற்காகவே வந்திருக்கிறேன்.


 தேர்தல்கள் மாறி மாறி நடைபெறும்; அரசுகள் வரும் – போகும். ஆனால், எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அது மக்களுக்கு சேவையாற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.  அந்த வகையில், எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த இரண்டாண்டுகளில் மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளது.


நான் பிரதமராக ஆட்சிப் பொறுப்பு ஏற்கும்போது, அரசின் கருவூலத்தில் மிகக் குறைந்த அளவு நிதியே இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்த 10 ஆண்டுக்காலத்தில், பல திட்டங்களுக்காக இந்த நிதி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் திட்டங்கள் ஏட்டளவிலேயே நின்றுவிட்டன. ஒன்று கூட செயல்பாட்டுக்கு வரவில்லை.


மக்களுக்காக அவர்கள் (காங்கிரஸ்) இத்தனை காலம் என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை. ஊழல் செய்வதற்கும், நாட்டின் வளங்களைச் சுரண்டுவதற்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும். அவ்வாறு இருக்கையில், மக்களைப் பற்றி சிந்திப்பது கடினம்தானே?


 முந்தைய ஆட்சிக் காலத்தில் ஊழல் முறைகேடுகளைத் தவிர வேறு ஏதாவது நல்ல செய்திகளைக் கேட்டிருக்கிறீர்களா? அதேசமயம், இப்போது நடைபெறும் பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் முறைகேடாவது நடந்திருக்கிறதா? உங்கள் பணம் சுரண்டப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. ஏனெனில் இப்போது காலம் மாறிவிட்டது. நம்பிக்கையற்ற இருண்ட காலம் விலகி நம்பிக்கை நிறைந்த விடியல் பிறந்துவிட்டது.

எனது இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுமே ஏழைகளுக்கான திட்டங்கள். ஒன்றுகூட செல்வந்தர்களுக்கானது அல்ல. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மண் தர அட்டைகள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், தங்களின் விளைநிலங்களின் தரத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப பயிர்களை விளைவித்து லாபமடைய முடியும்.


 விவசாயக் குடும்பத்தினருக்காக காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. அதேபோல், சமையல் எரிவாயு மானியம் முழுக்க முழுக்க ஏழைகளைச் சென்று சேர வேண்டும் என்பதற்காக அந்த மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழைகள் பயனடைந்து வருகின்றனர்.


பெண்களை முன்னேற்றாமல் ஒரு நாட்டை முன்னேற்றுவது இயலாத காரியம் என்பதில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். அதனால்தான், "பெண் குழந்தைகளைக் காப்போம்; கல்வி கற்பிப்போம்' என்ற திட்டத்தை எனது அரசு கொண்டு வந்தது. ஜாதி, இனம், மதம் கடந்து நாட்டில் உள்ள அனைத்து பெண் பிள்ளைகளுக்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


நாட்டின் முன்னேற்றத்துக்கு மற்றொரு மிக முக்கிய தேவை, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகும். அந்த வகையில், முந்தைய ஆட்சிக்காலங்களில் செயல்படுத்தப்பட்டதைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக சாலைக் கட்டுமானத் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.


 தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில், இந்தியாவில் 18 ஆயிரம் கிராமங்களில் மின்சார வசதியே இல்லாதது வெட்கக்கேடான ஒன்று. அதற்குத் தீர்வு காணும் வகையில், அந்த கிராமங்களுக்கு மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு எனது அரசு எடுக்கும் முடிவுகளும், திட்டங்களும் ஏழைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவுமே இருந்து வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத்தேவையை பூர்த்திசெய்வது மிகவும் கடினமாகும்.


 இதனைக் கருத்தில் கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதானது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 65-ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு நிகழ்வாரத்திலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். இதன்மூலம் மருத்துவர்களால் மக்களுக்கு நீண்ட காலம் சேவைபுரிய முடியும்.

இந்த தருணத்தில் மருத்துவர்களுக்கு ஒருவேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் மாதத்தில் ஒரு நாளேனும் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும். அவ்வாறு கணக்கிட்டால், ஆண்டுக்கு 12 நாள்கள் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.  நாட்டில் ஒருகோடி குடும்பங்கள் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முடிகிறது என்றால், ஆண்டுக்கு 12 நாள்கள் ஏழைகளுக்காக மருத்துவர்கள் சேவையாற்றுவதும் சாத்தியமே 

உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது

Tags:

Leave a Reply