சட்டப்பிரிவு 35-A என்ன சொல்கிறது?

1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு – காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் 35-A சட்டப்பிரிவு இந்திய அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

954ஆம் ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவரின் உத்தரவின் படி 35-A சட்டப்பிரிவு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் சட்டப்பிரிவு 370- உடன் சேர்க்கப்பட்டது. இது, மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார், அவர்களுக்கு என்ன உரிமை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை 35-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழங்குகிறது. மேலும் சம உரிமை, சமத்துவம் ஆகியவை பாதிக்காதவாறு, அம்மாநில சட்டப்பேரவை எந்தவொரு சட்டத்தையும் இயற்றிக் கொள்ளலாம்.

370வது பிரிவு சொல்வது என்ன?

 

 • இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய நாடாளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.
 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடி உண்டு ஆயினும் இந்தக் கொடியை இந்திய தேசியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும். இம்மாநிலத்திற்கு தனி அரசியல் சாசனமும் உண்டு
 • அம்மாநில ஆளுநரை நியமிக்கும் பொழுது, அம்மாநில முதல்வரை ஆலோசித்தப் பின்னரே நியமிக்க வேண்டும்.
 • இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
 • ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தால் அவர்கள் நிலம் வாங்க முடியும்.
 • ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.
 • அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.
 • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
 • முதலில் உருவாக்கப்பட்ட 370வது பிரிவில், “மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்” என கூறப்பட்டிருந்தது.
 • அதன்பின்னர் 1952 நவம்பர் 15-ல் அதில், அதாவது 370வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, “மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்” என வரையறுக்கப்பட்டது.
 • அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

Comments are closed.