சபரி மலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை இனி மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி (சி.எப்.டி.ஆர்.ஐ) நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இந்த சிஎப்டிஆர்ஐ உணவு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி பழனி முருகன்கோயிலிலும், திருப்பதியிலும் இதுவரை பிரசாதம் தயாரித்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் நடைபெறும் புனிதபயணத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களுக்கு அப்பமும், அரிசியினால் செய்யப்பட்ட அரவணை பாயசமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


 இந்த பிரசாதங்களின் தரத்தையும், சுவையையும் இன்னும் கூடுதலாக்கும் வகையில், சி.எப்.டி.ஆர்.ஐ நிறுவனத்துடன் சபரிமலை நிர்வாகம் இணைந்து செயல்பட உள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பு முறைகளை நேரில்பார்த்து அறியும் வகையில், மைசூரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலைக்கு சபரி மலை தேவசம் போர்டு அதிகாரிகள் அண்மையில் சென்று வந்துள்ளனர்.


 இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் கூறியதாவது: ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மாதாந்திர பூஜைக்காக மே 15-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. அதற்கு அடுத்த நாள் சி.எப்.டி.ஆர்.ஐ நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அந்த நிறுவனத்தின் உணவு தொழில்நுட்ப வல்லுநர்கள் சபரிமலை வரும்போது, இங்கு பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.


 அடுத்த சீசனிலிருந்து பக்தர்களுக்கு புதியதயாரிப்பிலான அப்பமும், அரவணை பாயசமும் வழங்கப்படும் என்றார் அவர். ஐயப்பன் கோயில் திருவாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற கோயில்களிலும் பிரசாத தயாரிப்பு பணிகளை சி.எப்.டி.ஆர்.ஐ நிறுவத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply