பிரதமர் மோடி நரேந்திர மோடி தலைமையிலான மத்தியரசின் இரண்டாம் ஆண்டு வெற்றிவிழாவை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.


 பிரதமர் தலைமையிலான மத்தியஅரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, தில்லியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவினை, நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்குவதாக செய்திகள் வெளியாகின. அந்தநிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புதெரிவித்துள்ளது.
 வரி ஏய்ப்புசெய்து வெளிநாடுகளில் கருப்புப்பணம் வைத்திருப்போரின் பட்டியலில் (பனாமா ரகசிய ஆவணம்) அமிதாப் பச்சனின் பெயர் இடம்பெற்றிருப்பதால், அதுதொடர்பான விசாரணை நேர்மையாக இருக்குமா? என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வியெழுப்பினார்.


 அதற்குப்பதிலளித்து அமிதாப் பச்சன் கூறுகையில், "அந்த விழாவை நடிகர் ஆர்.மாதவன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். மத்திய அரசின் "பெண் குழந்தைகளைக் காப்போம்' என்ற திட்டம் பற்றிய நிகழ்ச்சியில் மட்டும் நான்பங்கேற்கிறேன்' என்றார்.


 இந்நிலையில், அமிதாப்பச்சனுக்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சதானந்தா கெளடா கூறியதாவது:


 மத்திய அரசின்விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்பதற்கும், கருப்புப் பணம் தொடர்பான அவர் மீதான விசாரணைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பனாமா ஆவணம்தொடர்பான புகாரை, சுதந்திரமான புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார் அவர்.


 இதேபோல், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, பாஜக எம்.பி. பரேஷ் ராவல் ஆகியோரும் அமிதாப்பச்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 "பனாமா ஆவணத்தில் அமிதாப்பச்சனின் பெயர் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் குற்றவாளி என எந்த நீதி மன்றமும் தீர்ப்பளிக்கவில்லை; சமூகத்தில் மதிப்புடன் இருக்கம் அமிதாப்பச்சன் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடம் எழுப்புவதற்கு தற்போது எந்தப்பிரச்னையும் இல்லை என்பதால், விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்பதை பிரச்னை எழுப்புகிறார்கள்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply