உலகில் 150- க்கும் மேற்பட்ட நாடுகள் ஏதோ ஒரு வகையில் மதிப்புக் கூட்டு வரியைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.


எல்லா மாநிலங்களிலும் 2005- ஆம் ஆண்டு முதல் மதிப்பு கூட்டு வரி அறிமுகமானது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவான ஒரு முன்வரைவைத் தயார் செய்ய முனைந்தது. இதன் விளைவாகவே முதல் விவாத அறிக்கை 2008- 09 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, 115- ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களைவையில் தாக்கல் செய்யப்பட்டது.


ஆனால் அதற்குப் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் அந்த சரக்கு மற்றும் சேவை வரி முன்வரைவை கிடப்பில் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது பாஜக தலைமையிலான அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை ஒரு பெரிய சீர்திருத்தமாக முன்வைத்து, 101- ஆவது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை செப்டம்பர், 8, 2016 அன்று அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இந்த புதிய வரி அமைப்பின் நோக்கம், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த ஒரு விரிவான ஆய்வைக் காண்போம்.சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன? இது ஒரு புது வரி விதிப்பா, அல்லது பழைய வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்டதா? சரக்கு மற்றும் சேவை வரி, அனைத்து கொள்முதல் மீதும், அதாவது உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை ஆகிய மூன்றும் தனித்து அல்லது ஒன்று கூடி இருக்கும் நிலையில் அதன் மேல் விதிக்கப்படுவதாகும். இதற்கு முன்னர் மத்திய அரசு உற்பத்தி (கலால் வரி) சேவை (சேவை வரி) வரிகளையும், மாநிலங்கள் தனித்தனியே விற்பனை வரியையும் விதித்து வந்தன.
நமது அரசியல் சாசன சட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவையும் விற்பனையும் தனித்தனி பட்டியலில் உள்ளடங்கி இருந்ததால், மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியே மேற்கூறிய வரிகளை விதிக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருந்தன.


இந்த நிலையை மாற்றி அமைத்து இரு அரசுகளும் ஒன்று கூடி ஒரே விதமாக சரக்கு அல்லது சேவை என்ற எந்த ஒரு வித்தியாசமும் பாராட்டாமல் ஒரு பொருளின் மதிப்பின் மீது ஒரே வரியை (ஜிஎஸ்டி) விதிக்க ஏதுவாக ஷரத்து 246ஏ(1) அரசியல் சாசன சட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.மத்திய விற்பனை வரி என்றோர் வரி (சிஎஸ்டி) மாநில எல்லைதாண்டிய வரி விதிப்பாக இருந்து வந்தது. இதனை மாநில அரசே விதித்து, இதன் வருவாயை தன் வசம் வைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்து வந்தது. இது ஒரு உருவாக்க நிலை வரி விதிப்பு ஆகும்.


இதனால் வரி எந்த மாநிலத்தில் உருவானதோ அந்த மாநிலத்திற்கே சொந்தமானதாக பாவிக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது, இதே வரி நுகர்வுநிலை வரியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ( ஐ.ஜி.எஸ்.டி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே இந்த புது வரிவிதிப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது நிலை வரி ஆகும்.


ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றம் சேவை வரி ( ஐஜிஎஸ்டி) என்றால் என்ன? இதன் நோக்கம் மற்றும் மாற்று அமைப்பு எந்த வகையில் புதிய வரிவிதிப்பில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது?.ஜிஎஸ்டி வரிவிதிப்பின் முக்கிய அம்சமே இந்த ஐஜிஎஸ்டி வரிதான். இது இல்லையென்றால், ஜிஎஸ்டி வரி தனித்து இயங்கும் பட்சத்தில், அது ஒரு பெரிய பன்முக மறைமுக நுகர்வு வரி விதிப்பாக விளங்கும் வாய்ப்பே இல்லை. ஜிஎஸ்டி என்பது பலவிதமான மறைமுக வரிகளை உள்ளடக்கிய ஒன்று என்பது உண்மைதான்.


புதிய முறை, வரிக்கு மேல் வரி என்ற நிலையை ஒழிக்க உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வரிக்கு மேல் வரி என்ற நிலை தவிர்க்கப்பட்டு, கடைநிலை நுகர்வோர் வரிச் சுமை குறைப்பு நடவடிக்கையாக அமைவது இதன் சிறப்பு அம்சமாகும்.இத்தகைய வரிச் சுமை குறைப்பு மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கு மட்டுமே வரி என்ற நிலைதான் ஏற்கெனவே வாட் வரி விதிப்பின் கீழ் உள்ளதே? அப்படியிருக்க ஜிஎஸ்டி எப்படி ஒரு புதுமையான முறையாக கருதப்படுகிறது?


முந்தைய வரி விதிப்பு முறை நுகர்வோர் வாழும் மாநிலங்களுக்கு அல்லாமல் அது உருவாகும் மாநிலங்களிலேயே தங்கிவிடும் வரியாக இருந்து வந்துள்ளது.இந்த நிலை ஜிஎஸ்டி மூலம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கூறிய ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) துணைபுரியும்.
ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) என்பது உண்மையில் ஒரு வரியே அல்ல. இது வரிகளைக் கொண்டு சேர்க்கும் வாகனமே ஆகும்.


அதாவது, முதல்கட்ட வரிவிதிப்பு இடத்திலிருந்து வரிகளை சுமந்துகொண்டு போய் கடைசி கட்டமாக பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த இருக்கும் மாநிலத்திற்கு வழங்க வழி செய்யும் ஒரு உபகரணமே இந்த ஐஜிஎஸ்டி. இத்தகைய மாற்று அமைப்பின் தேவையின் கீழ் ஒரு முக்கியப் பொருளாதார அடிப்படை அமைந்துள்ளது. வரி செலுத்தும் கடைநிலை நுகர்வோர் வாழும் மாநிலங்களை விடுத்து, இதுவரை உற்பத்தி செய்யும் மற்றும் உருவாக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி முன்னுரிமை வழங்கி வந்துள்ளது.
இதன்காரணமாக உருவாக்கும் அல்லது உற்பத்தி செய்யும் மாநிலங்களை, நுகரும் மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்காக எதிர்நோக்கி இருக்கும் சூழ்நிலை இருந்தது.


உருவாக்கும் மாநிலங்கள் மேலும், மேலும் வளர்ந்தும், நுகரும் மாநிலங்கள் மேலும், மேலும் பின்தங்கியும் உள்ள ஒரு சூழ்நிலை தொடர்ந்தது.இது வளர்ச்சிக்கு உகந்த பொருளாதார மாதிரி ஆகாது. இதன் காரணமாகவே ஜிஎஸ்டி ஒரு நுகர்வோர் வரியாக உருமாற்றப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் பொருளாதார மாற்றத்தை தோற்றுவிக்கும் என்று நம்பப்படுகிறது.


மாநிலங்களின் பொருளாதாரம் இந்த வரியமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படும். ஒவ்வொரு மாநிலமும் இந்த வரி விதிப்பின் மூலம் தன்னிறைவு பெறும் என்ற ஒரு கனவின் தொடக்கமாகவே இந்த வரி அறிமுகமாகியுள்ளது.
ஜிஎஸ்டி என்பது ஒரே வரி ஆகும். ஆனால், அது சிஜிஎஸ்டி என்றும் எஸ்ஜிஎஸ்டி என்றும் வரி விதிப்புக்கு பின்னர் பகிர்வு செய்யப்பட்டுவிடும். யாரும் அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. உதாரணமாக 18 சதவீதம் ஜிஎஸ்டி என்றால் அதில் சரி பாதி 9 சதவீதம் மாநிலங்களுக்கும், 9 சதவீதம் மத்திய அரசுக்கும் சென்றடையும்.
இதை விற்பனை சீட்டுமுதல், வரி செலுத்தும் படிவம் வரை கணினிமயமாக்கி, வரி வசூல் செய்யவும், வசூல் செய்த வரிகளை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பகிர்வு செய்யவும் மாபெரும் கணினி வலைக் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.


சரி, அப்படியென்றால் இந்த புதிய வரியமைப்பு, உருவாக்கும் மாநிலங்களை சோர்வடையச் செய்வதாகவும் நுகரும் மாநிலங்களை ஊக்குவிப்பதாகவும் ஆகாதா?ஆகாது. அண்டை மாநிலங்களும் பயன்பெறும் வகையில் அமையும் வரி தான் ஜி.எஸ்.டி. அந்த வகையில் இது ஒரு பாரபட்சமற்ற வரி அமைப்பு என்று கூறினால் அது மிகையாகாது.இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வியாபாரிகளுக்கு எந்த வகையான வரி மற்றும் நிதி சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகக் கூடும்?


அனைத்து நுகர்வோர்களையுமே சென்றடையும் இந்த வரிச்சுமை எவ்வாறு காலப்போக்கில் அவர்களுடைய வரிச் சுமை மற்றும் செலவினங்களைப் படிப்படியாக குறைக்கும் தன்மை உடையதாகக் கருத முடியும் என்பதைப் பார்க்கலாம்.ஜிஎஸ்டி வரி என்பது, வியாபாரிகளின் கையில் வரிகளாகத் தங்கி, பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பில் ஓர் அங்கமாக மாறி, பண வீக்கத்தை உண்டு பண்ணாது.


அதே சமயம் வரிகள் அனைத்தும் விநியோகஸ்தர்கள் முதல் நுகர்வோர் வரை தங்காமல் சென்றடைவதால், எல்லா வரிச்சுமையும் நுகர்வோர் மீதே சுமத்தப்படுகிறது என்பதும் உண்மை.இந்த நிலை மாற, மத்திய அரசு ஜிஎஸ்டி மூலம் ஏற்படுத்தியுள்ள வரி, வரிச்சுமை குறைப்பு நடவடிக்கை மூலம் ஏற்படும் விலை ஆதாயத்தை வியாபாரிகள் நுகர்வோருக்கு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை இடவும், அனைத்து ஜிஎஸ்டி ஆதாயங்களும் நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யவும், கொள்ளை லாபத்தைத் தடுக்கவும் சட்டம் மற்றும் விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஜிஎஸ்டி வரிவிகிதம் மற்றும் வரிச்சுமைக் குறைப்பு மூலமாக கிடைக்கும் எல்லா ஆதாயங்களையும் வியாபாரிகள் நுகர்வோர்களிடம் பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தவறினால், தண்டிக்கப்படும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.ஆகவே, ஜிஎஸ்டியின் பலன்களை பொதுமக்கள் முழுமையாக அனுபவிக்கும் வகையில், ஒரே வரி, ஒரே சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா என்ற ரீதியில் இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜூலை 1 முதல், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.


கட்டுரையாளர்:
இந்திய வருவாய் பணி அதிகாரி.

நன்றி தினமணி

One response to “சரக்கு – சேவை வரி: ஒரு கண்ணோட்டம்”

  1. S.Kamaraj says:

    Superb. Thanks for the informative article.

Leave a Reply