அண்மையில் விரிவாக்கம் செய்யப் பட்ட மத்திய அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்க நரேந்திரமோடி முன்வந்தாக சிவசேனை எம்.பி. சஞ்சய்ராவுத் கூறியுள்ளதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய்ராவுத் எழுதிய கட்டுரை, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான "சாம்னா'வில் ஞாயிற்றுக் கிழமை வெளியானது.


அந்தக் கட்டுரையில், அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது,  சரத் பவார், தனது மகள் சுப்ரியா சுலேவை புதிய அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாகவும், எனினும் அதில் சுப்ரியா சுலே ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறியதாக அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், இந்தத்தகவலை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறியதாவது:
மத்திய அமைச்சரவையில் தன மகளுக்கு இடமளிக்க நரேந்திரமோடி முன்வந்ததாக சரத்பவார் கூறியதையும் நம்ப முடியாது; அவர் அவ்வாறு கூறியதாக சஞ்சய்ராவுத் கூறியதையும் நம்ப முடியாது. காரணம், அவர்கள் இருவருமே நம்பகத்தன்மை அற்றவர்கள்.


புதிய அமைச்சரவையில் இடம்பெற தேசியவாத காங்கிரஸ் விரும்பியிருக்கலாம்.அந்த ஆசை நிறைவேறாத ஆதங்கமே இதுபோன்ற பொய்த்தகவல்களை அவர்கள் பரப்புவதற்கான காரணமாக இருக்கும் என்றார் மாதவ் பண்டாரி.

Leave a Reply