சரியாக வேலைசெய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு இனிகிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்த 7-வது சம்பளகமிஷன் பரிந்துரைகள் நேற்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவிஉயர்வு, சம்பள உயர்வை ரத்துசெய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும், நன்று என்பதில் இருந்து மிகநன்று என்று உயர்த்த வேண்டும். இவ்வாறு கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'இனி சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது' என, நிதித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பணியில் சேர்ந்த முதல் 20 ஆண்டுகளில், ஒரு ஊழியர், இந்த அளவுகோலை எட்டாவிடில், அவருக்கு எதிர்காலத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதேபோல் பதவி உயர்வையும் நிறுத்திவைக்கலாம் என்று 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply