சர்வதேச யோகா தினத்தன்று, ஓம் உள்ளிட்ட வேதமந்திரங்களை உச்சரிப்பது கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யோகா பயிற்சிகளின் போது அனைவரும் ஓம் மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் என்ற விதிமுறை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, யோகா தினத்தில் பங்கேற்றுள் பல்கலை., மற்றும் கல்லூரிகளின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தகடிதத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜூன் 21ம் தேதியன்று நடக்கும் சர்வதேச யோகா தினத்தன்று நடக்கும் 45 நிமிட நிகழ்ச்சியில் யோகாபயிற்சிகள், தியானம் மற்றும் மந்திரங்கள் உச்சரிப்பு தொடர்பான விதிகளை மத்திய அரசு விளக்கியுள்ளது.

 

இதில், யோகாநிகழ்ச்சி துவங்குவதற்கு முன் அனைவரும் ஓம் மந்திரத்தை உச்சரிக்கவேண்டிய அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டும் உச்சரிக்கலாம். மற்றவர்கள் அமைதியாக இருக்கலாம். இதற்கு யாரும் எதிர்ப்புகூறவில்லை. யோகா நிகழ்ச்சி இறை வழிபாட்டுடன் துவங்க உள்ளதால் அவரவர் வழக்கப்படியும், விருப்பப்படியும் நமஸ்கார முத்திரையில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு யோகாதின நிகழ்ச்சி டில்லிக்கு பதிலாக சண்டிகரில் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு டில்லி ராஜ்பாத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட 40,000 மாணவர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமரின் மோடியின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்ததை அடுத்து 191 நாடுகளில் யோகா தினம் கொண்டாடபட்டது.

Leave a Reply