"சாகர்மாலா' துறைமுக மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அடுத்த 4, 5 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என மத்திய தரை வழிப் போக்கு வரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


 நாட்டில் உள்ள 7,500 கி.மீ. கடலோர பாதைகள், 14,500 கி.மீ. நீர்வழிப்பாதைகள், சர்வதேச கடல்சார் வர்த்தக வழிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் "சாகர் மாலா' திட்டம் தொடர்பான உயர்நிலை குழுவின் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.


 அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 "சாகர்மாலா' திட்டத்தின்கீழ் கப்பல் மற்றும் துறைமுகத் துறையில்மட்டும் குறைந்தபட்சம் ஒருகோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில், 40 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மறைமுகமாகவும் உருவாக்கப்படும்.


மும்பையில், வரும் 14ம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்திய கடல்சார் உச்சிமாநாட்டில் மட்டும், இந்த துறையில் சுமார் ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும்.


 கடல் சார் துறையில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவ தற்காகவே, இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடி வெளியிடவுள்ள அறிவிப்புகளின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகத்துறை உந்து சக்தியாகச் செயல்பட முடியும். நாடுமுழுவதும் உள்ள 116 நதிகளை நீர்வழி பாதைகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.


 நீர்வழி பாதைகளை மேம்படுத்துவதன் மூலம், சாலை போக்கு வரத்து, ரயில்வே ஆகியவற்றைவிட நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் சரக்குகளை கொண்டுச்செல்லும் செலவுகள் குறையும்.


 மேலும், முக்கியத் துறைமுக நகரங்களில் பொலிவுறுநகரங்களை அமைப்பது, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹால்டியாவுக்கும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசிக்கும் இடையில் கங்கைநதியில் 1,620 கி.மீ. தூரத்திய நீர்வழித் தடத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். நாடுமுழுவதும் உள்ள 13 மாநிலங்களில் வசிக்கும் ஒருலட்சம் மீனவர்களின் நலன்களை காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply