மகாத்மா காந்தியை தீவிரவாதி எனக்கூறும் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்…

சகோதரர் திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டு விட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் தேர்தல் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுலை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார்.

தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.

ஆக, இவர்களின் கொள்கை என்பது அவர்களின் சுய நலம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். ஆனால், அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்.

இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகள் என்ன சொல்லப் போகிறது?

மன்னார்குடி ஜீயரின் கருத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் திருமாவளவன் மகாத்மா காந்தியடிகளை தீவிரவாதி எனக்கூறியதை கண்டிக்க தவறியது ஏன்? கூட்டணி பாசமா?

காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ‘ஹேராம்’ என்று சொன்னது தப்பா? எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கி இருக்கிறார்.

இளைஞர்கள் மனதில் பிரிவினை வி‌ஷத்தை பாய்ச்சி வரும் திருமாவளவன் மனநிலை எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டு இருக்கிறது. தான் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார். இப்படியே பிரிவினை உணர்வுகளுடன் பேசியே குளிர்காய நினைக்கிறார். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதில் அவரது வலையில் சிக்க மாட்டார்கள்.

சாதிய வாதிகளுக்கு அடுத்தவரை மதவாதி என்று சொல்ல என்ன அருகதை உள்ளது.மோடி எதிர்ப்பை மட்டுமே விதைத்துவரும் உங்களுக்கு தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும்.

இலங்கைத்தமிழர் ஞாபகம் தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆன பின்னர்தான் வருகிறதா? படுகொலைக்கு துணை போன காங்.உடன்கூட்டணி சேர்த்து தங்களுக்கு அரசியல் மறுவாழ்வு தேடிய தலைவர்கள் வைகோ திருமா.ஸ்டாலின் இனி இலங்கை தமிழரை பற்றி பேச தார்மீக உரிமை இல்லை.

Dr. தமிழிசை சௌந்திரராஜன்

மாநில தலைவர்

Comments are closed.