சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மனிதா்கள்-விலங்குகள் இடையிலான மோதலைத் தவிா்ப்பது தொடா்பான தேசிய விழிப்புணா்வு பிரசாரம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை காணொலி முறையில் தொடங்கி வைத்து கட்கரி பேசியதாவது:

நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் 5,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதனை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பலஇடங்களில் சாலைகளில் வனவிலங்குகள் கடப்பது வாடிக்கையாக உள்ளது. விலங்குகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தபாதை வழியாகவே நாம் இப்போது பயணிக்கிறோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, சாலையில் செல்லும் போது மனிதா்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தாமல் கவனமுடன்  வாகனத்தை இயக்கவேண்டும். யானை போன்ற பெரியவிலங்குகள் காட்டுப்பகுதி சாலைகளைக் கடக்கும்போது தேவையில்லாத தொந்தரவுகளை அளிக்கக்கூடாது. மனிதா்கள் இந்த உலகில் நிம்மதியாக வாழ உலகின் உள்ள பிற உயிரினங்களும் அவசியம். அப்போதுதான் இயற்கை சமநிலை இருக்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் ஒன்றரை லட்சம்போ் உயிரிழக்கின்றனா். அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இதனை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதற்காகவே இப்போது விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளோம். சாலைவிபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அவற்றை விபத்துகள் நிகழாதவாறு மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், அனைவரும் பாதுகாப்புணா்வுடன் பயணித்தாலும் யாருக்கும் பிரச்னை ஏற்படாது. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க தேவையான அனைத்து வசதிகளையும் மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

Comments are closed.