சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருவனந்தபுரத்தில் வியாழக் கிழமை இரவு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

தென்னிந்தியாவின் குரலை, நாட்டின் பிறபகுதிகளில் ஒலிக்கச் செய்வதற்காக, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக ராகுல் காந்தி கூறினார். அப்படியெனில், அவர் திருவனந்தபுரம் தொகுதியையோ அல்லது பத்தனம்திட்டா தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவர் தனக்கு மிகவும் பாதுகாப்பான வயநாடு தொகுதியைத் தேர்வுசெய்தது ஏன்?

அவர், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம், தென்னிந்தியாவுக்கு புதிதாக எந்த செய்தியையும் தரப்போவதில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியை அவர் தேர்ந்தெடுத்தார்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசும், கம்யூனிஸ்டுகளும் நமதுபாரம்பரிய சடங்குகளுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றிவரும் பாரம்பரிய, கலாசாரத்தை அவர்கள் அழிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். (சபரிமலை விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்).

காங்கிரஸும், இடதுசாரியும் மாறிமாறி இந்த மாநிலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். சந்தர்ப்ப வாதமே அவர்களுடைய கொள்கையாக உள்ளது. கேரளத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள். ஆனால், தில்லியில் அவர்கள் இணைந்து செயல் படுகிறார்கள். இது, முழுக்க முழுக்க சுயநலமும், சந்தர்ப்பவாதமும் நிறைந்த அரசியல் என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply