இந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.சிக்கிம், திபெத், பூடான் சந்திப்பு பகுதியான டோக்லாமில் புதிதாக சாலைஅமைக்க சீன ராணுவம் முயற்சி மேற்கொண்டது.

இந்தப்பகுதி இந்தியாவின் ‘கோழிக் கழுத்து’ என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும்பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சீனா சாலைஅமைத்தால் கோழிகழுத்து பகுதியை அணுகுவது மிக எளிதாகிவிடும்.

சீனாவின் வியூகத்தை உடைக்க டோக்லாமில் சீனராணுவம் சாலை அமைப்பதை இந்தியராணுவம் தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக அங்கு 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது. சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியிருப்பதாக அந்தநாடு வாதிட்டுவருகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் சீனாவின் வாதம் அங்கீகரிக்கப் படவில்லை.

பெரும்பாலான மேற்கத்திய ஊடகங்கள் டோக்லாம் எல்லையில் சீனராணுவம் அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளன. மேலும் அமெரிக்க பாதுகாப்புத்துறை நிபுணர்கள், டோக்லாம் விவகாரத்தில் இந்தியா பொறுப்புள்ள வல்லரசு நாடாக செயல்படுவதாகவும் சீனா சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க கடற்படை போர்கல்லூரியின் மூத்த பேராசிரியரும் பாதுகாப்புத் துறை நிபுணருமான ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் அண்மையில் கூறியபோது, லோக்லாம் பிரச்சினை பெரிதாகவெடித்தால் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.

எல்லை பிரச்சினை குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஹீத்தர் அண்மையில் கூறியபோது, இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இந்தப்பின்னணியில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்ஸு டெல்லியில் கூறும்போது, “டோக்லாம் பிரச்சினையை ஜப்பான் மிகவும் உன்னிப்பாக கண்காணித்துவருகிறது. தற்போதைய பதற்றத்தால் பிராந்திய அமைதிக்கு பாதிப்பு ஏற்படும். பூடானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா செயல்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இதுதொடர்பாக சீனாவுடன் ராஜ்ஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ஜப்பானும் அதேயேவிரும்புகிறது. எல்லைப் பிரச்சினையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவறு. படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்சிக்கக்கூடாது”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply