ஆகஸ்ட் 15-ல் வரவிருக்கும் சுதந்திர தினத்தைக் கடந்த ஆண்டைவிட அதிக நாட்கள் கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. கடந்த வருடம் சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 11-ல் துவங்கி 20-ம் தேதி வரை நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசப்பற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த ஆகஸ்ட் 15-ன் சுதந்திரதின விழா 10 தினங்கள் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறுவகை விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து எம்பிக்களும் தங்கள் தொகுதிகளில் தேசியக் கொடி ஏந்தி ஊர்வலங்களை நடத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தவகையில், வரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் துவக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த நாளில் ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்வதுடன், நம் நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் முடிகிறது. இந்த இருமுக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிடும் வகையில், சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இந்த கொண்டாட்ட நாட்கள் முடிவடையும்வரை டெல்லியில் உள்ள அனைத்து மத்திய அரசின் துறைகளும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்படும். நாடாளுமன்றம் மற்றும் டெல்லியின் சட்டப் பேரவைக் கட்டிடமும் ஒளிவிளக்குகளுடன் காணப்படும்.

இந்த நாளுக்காக கடந்தவருடம் துவக்கிய ‘பாரத் பர்வ்’எனும் சிறப்பு கண்காட்சியுடனான நிகழ்ச்சி இந்தவருடமும் நடைபெறும். இதில், நாடுமுழுவதிலும் உள்ள மாநிலங்கள் சார்பில் பல்வேறு கைவினைஞர்கள் கலந்துகொண்டு தம் திறமைகளை காட்ட உள்ளனர்.

இவர்கள் படைப்புகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 20-ம் தேதிவரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடியுடன் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply