மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோரை மாநிலங்களவை நியமன எம்பி.க்களாக குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி வெள்ளிக்கிழமை நியமித்தார்.


 இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து, சோனியாகாந்தி தலைமையிலான முந்தைய தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் (என்ஏசி) உறுப்பினர் நரேந்திர யாதவ் ஆகியோரை மாநிலங்களவை நியமன எம்பி.க்களாக நியமிப்பதற்கு குடியரசு தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.


 இதேபோல், மலையாள நடிகர் சுரேஷ்கோபி, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் பரிந்துரையை ஏற்று, மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக மேற்கண்ட 6 பேரையும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார் என்றார் அவர்.


 சுப்பிரமணியன் சுவாமி, மத்திய முன்னாள் சட்டத்துறை, வர்த்தகத் துறை அமைச்சராகவும், திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply