நாடுமுழுவதும்  சென்னை உள்பட 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் ரூ.5744 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில்  மாநகர போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளை இயக்கிவருகின்றன. கடந்த 2014-15ம் ஆண்டில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 8 மாநகர போக்குவரத்து கழகங்கள் மொத்தமாக ரூ.5744 கோடி நட்டத்தில் இயங்குவதாக மத்திய போக்கு வரத்து புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இது இதரபகுதிகளில் பஸ்கள் இயக்கிய வகையில் மாநில போக்குவரத்து கழங்கள் சந்தித்த நட்டத்தைவிட 50 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையில்,மாநகர போக்குவரத்து கழகங்களில் பெங்களூருதான் அதிகமான பேருந்துகளை இயக்கிவருகிறது. அதிகமான பயணிகள் மற்றும் வருவாயிலும் அதுதான் முன்னிலையில் உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருபஸ் 798 பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஆண்டு வருவாய் ரூ.2256.8 கோடியாக உள்ளது. இதற்கு அடுத்த படியாக மும்பை 788 பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயில் ரூ.1508 கோடியை ஈட்டி தருகிறது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சென்னையில் நாள் ஒன்றுக்கு 1311 பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும் வருவாயில் ரூ.1376.5 கோடியை மட்டுமே ஈட்டி தருகிறது. பெங்களுரி–்ல் 6649 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் சென்னையில் 3787 பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. இதே போல் டெல்லி,  மாநகர போக்குவரத்து கழகம்  ரூ.1113.2 கோடி, வருவாயை ஈட்டுகிறது.

கடந்த 2014-15ம் ஆண்டில் மெட்ரோ நகரங்களில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்து கழகங்கள் மூலமாக சுமார் 194 கோடி பயணிகள் பயணம்செய்துள்ளனர். இருந்த போதிலும் இவை அனைத்தும் நட்டத்திலேயே இயங்குகின்றன. கிடைக்கும்வருவாயில் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் ஊழியர்கள் சம்பளத்திற்கே செலவாகிவிடுவதால் மிஞ்சுவது எதுவும் இல்லை. வருவாயில் 55 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவாகிவிடுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்து கழகங்களிலேயே கொல்கத்தா தான் ரூ.72.5 கோடி என்றளவில் மிகவும் குறைவான வருவாயை ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply