சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அதிவேக வை-ஃபை வசதியை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பேசியாதாவது: அதிக முதலீடுகள் இல்லாததால் ரயில்வேத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்தியஅரசு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. அடுத்த 4 ஆண்டில் ரயில்வேத்துறைக்கு ரூ.8.15 லட்சம் கோடி ஒதுக்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளப்பறிய பங்காற்றி யுள்ளனர்.

அதிக முதலீடுகளை உள்கட்டமைப்புக்கு ஈர்க்கும் போது ரயில்வேத் துறை அதிக வளர்ச்சிபெறும். பயணிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் செய்வதற்கு கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களிலும், அடுத்தாண்டிற்குள் 400 ரயில் நிலையங்களிலும் இலவச அதிவேக வைஃபை வசதி செய்துதரப்படும்.

இதையடுத்து, ஆயூஷ் திட்டத்தின்படி பெரம்பூர் ரயில்வே மருத்துவ மனையில் மரபுசார்ந்த மருத்துவ சேவை வசதிகள், திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே 16.83 கி.மீ. தூரத்திலான 4-வது வழித் தடம், நாட்டிலேயே முதலாவது முறையாக ராமேசுவரம் – மானா மதுரை இடையே பசுமை வழித் தடம், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 1-ஆவது நடைமேடைக்கும் 2,3-ஆவது நடைமேடைகளுக்கும் இடையே 2 நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), திருச்சி ரயில்நிலையத்தில் அதிவேக வைஃபை வசதி ஆகிய திட்டங்களையும் காணொலிக் காட்சி முறையில் சென்னையில் இருந்து அமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதேபோல அரியலூர்-மாத்தூர் ரயில் நிலையங்கள் இடையே 25 கி.மீ. தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை வழித்தடம், சேலம் ரயில் நிலையத்தில் 1-ஆவது நடை மேடைக்கும், 3,4-ஆவது நடைமேடைகளுக்கும் இடையே என 2 நகரும் படிக்கட்டுகளையும் காணொலிக்காட்சி மூலம் சுரேஷ்பிரபு தொடங்கி வைத்தார்.

Leave a Reply