ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 35-ஏ பிரிவை  நீக்க உள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்படும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புஅதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ பிரிவை  நீக்க உள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு-காஷ்மீரில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தமாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டன.

அமர்நாத் யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேறவேண்டும் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை இரவு அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லியில் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

 இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. இக்கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் தலைமைச் செயலகம், காவல்துறை தலைமையகம், விமான நிலையம், பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகருக்குள் செல்லும் முக்கிய சாலைகள், நகரில் இருந்து வெளியேசெல்லும் முக்கியச் சாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து, தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் விடுதியில் இருந்து சொந்த ஊருக்குச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை திரும்பி வர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு (144 தடை உத்தரவு) பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து ஜம்முவில் பாதுகாப்பு கடுமையாக்க பட்டுள்ளது. இதன்படி ஒரேநேரத்தில் ஒரு இடத்தில் 4க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செல்லிடப்பேசி இணையதள சேவை நிறுத்தப்பட்டு விட்டது. காவல் துறை அதிகாரிகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவைத்தொடர்ந்து, காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 98 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்குபார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் ,

Comments are closed.