சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.


ஒருமுக வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டதன் மூலம் நாடு சுதந்திர மடைந்த 70 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றம்தான் இது என்றும் அவர் கூறினார்.


பிக்கி அமைப்பின் 90வது ஆண்டுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–ஜிஎஸ்டி. முறையால் வரிவருமானம் குறைந்துள்ளது. இதுபோன்ற ஒற்றைவரி விதிப்பு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது தொழில் துறையினர் தான்.
முந்தைய வரி விதிப்பு முறையில் மத்திய அரசு வரி மற்றும் மாநில அரசுகளின்வரி விதிப்புகள் காரணமாக சரக்குகளை எடுத்துச் செல்வது கால தாமதமானது. அதேபோல ஒருபொருளுக்கு பலமுனை வரி விதிக்கப்பட்டது. அதுவும் மாறுபட்ட வரிவிகிதங்களில் விதிக்கப்பட்டது.


மாநில அளவிலான வரிவிதிப்பு முறைகள் முற்றிலுமாக மாற்றப்பட்டு இப்போது நாடுமுழுவதற்கும் ஒரே அளவிலான வரி விதிக்கப் படுகிறது.மாநிலங்கள் வரியாக செஸ், உபரிவரி, ஆடம்பர வரி, மாநில மதிப்பு கூட்டு வரி (வாட்), வாங்கும் போது வரி, மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி), விளம்பரங்கள் மீதானவரி, பொழுதுபோக்கு வரி மற்றும் பல்வேறு வகைகளில் வரிகள் விதிக்கப்பட்டன.


மத்திய வரிகளாக சேவைவரி, சிறப்பு கூடுதல் சுங்கவரி (எஸ்ஏடி), கூடுதல் உற்பத்தி வரி, மத்திய உற்பத்தி வரி, கூடுதல் சுங்க வரி, மருந்துப் பொருள்கள் மற்றும் கழிவறை பொருள் தயாரிப்பு மீதான உற்பத்திவரி, ஜவுளிகள் மீதான கூடுதல் உற்பத்தி வரி என விதிக்கப்பட்டன.


ஜிஎஸ்டி முறையில் நான்கு அடுக் குகளாக 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற அளவிலே வரிவிதிக்கப்படுகிறது. அதேபோல முதல்முறையாக பொருள்தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி திரும்பப்பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளதால் முந்தைய வரி அளவைக்காட்டிலும் இது மிக மிகக் குறைவாகும்.


ஜூலை மாதத்தில் இது அமலுக்கு வந்தாலும் வரி விதிப்பு முறையில் மிகப்பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் வரி விதிப்புக்குள்ளாகும் 1,200 பொருள்களில் 50 பொருள்கள் மட்டுமே உயர்வரி அளவான 28 சதவீத வரம்பில் வருகின்றன. கூடுதல்வரி விதிக்கப்படும் மதுபானம், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் மீதான வரி வருமானம் மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்க உருவாக்கப் பட்டுள்ள நிதியத்துக்கு சென்று அது மாநிலங்களுக்கு வழங்கப்படும்.


கடந்த மாதம் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நுகர்வோர் பொருள்களான சாக்லேட், சூயிங்கம், ஷாம்பூ, டியோடரன்ட், ஷூ பாலிஷ், டிடர்ஜென்ட், சத்துணவுபானங்கள், மார்பிள் மற்றும் காஸ்மெடிக், உள்ளிட்டவற்றின் வரி அளவுகள் குறைக்கப் பட்டன. வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷன் உள்ளிட்டவை மட்டும் 28 % வரி வரம்பிலேயே வைக்கப் பட்டுள்ளன.   உணவகங்கள் மீதான வரி குறைக்கப் பட்டுள்ளது. தவிர ரூ.7,500 வரையிலான ஹோட்டல் அறை வாடகை மீதான வரி 5 % அளவுக்குக் குறைக்கப் பட்டுள்ளது. வரிக் குறைப்பு பலனை நுகர்வோருக்கு அளிக்காத ரெஸ்டாரென்ட்கள், உள்ளீட்டுவரியை திரும்பப் பெரும் வசதி ரத்து செய்யப்படும் என்றார். இது பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply