'ஜி.எஸ்.டி., வரியால், எந்தவகையிலும் விலைவாசி உயராது,'' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், சரக்கு மற்றும் சேவைவரியான, ஜி.எஸ்.டி., விளக்க கருத்தரங்கம், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது. இதில், வணிகர்களின் கேள்விகளுக்கு, வணிக வரித் துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

பின், மத்தியவர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சரக்கு மற்றும் சேவைக்காக, நாடுமுழுவதும் ஒரேமாதிரியான வரி விதித்து, நாட்டை முன்னேற்றும் பணியில், பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

'ஜி.எஸ்.டி., வரியால், சிறுதொழில்கள் நலிந்துவிடும், விலைவாசி உயர்ந்துவிடும்' என, தவறான தகவல்களை பலர் பரப்பி வருகின்றனர்; 20 லட்சம் ரூபாய்வரை, வருவாய் உள்ள தொழில்களுக்கு, ஜிஎஸ்டி., வரி இல்லை. இதில், ஏற்கனவே இருந்தவரிகளை, அனைத்து மாநில, நிதி அமைச்சர்கள்,அதிகாரிகள்

இணைந்த குழுவினர்தான் முடிவு செய்துள்ளனர்; புதிதாக எதையும் சேர்க்கவில்லை. அதில், குறைகள் இருப்பதாக உணர்ந்தால், ஜிஎஸ்டி., கவுன்சிலில் வணிகர்கள் தெரிவிக்கலாம்.

இதற்குமுன், கோவை, திருப்பூர், திருச்சியில் உள்ள வணிகர்களின் சந்தேகங்களை போக்கி, அவர்களின் கோரிக்கைகளை பெற்றுள்ளேன். இங்கு, அரிசி ஆலை, சினிமா, பிளாஸ்டிக் மறு சுழற்சி உள்ளிட்ட தொழில்கள், ஜி.எஸ்.டி.,யால் பாதிக்கப்படும் என, வணிகர்கள் தெரிவித்தனர். அதுகுறித்த மனுவை, 28ம் தேதி, டில்லியில் உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு எடுத்துசெல்வேன்.

பொதுவாக, சிறுதொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகளுக்கு, ஜிஎஸ்டி.,யால் நஷ்டம் ஏற்படாது. மாறாக, லஞ்சம், ஊழல் ஒழிந்து, உள் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். அறிவியல், கல்வி, சுகாதாரதிட்டங்களால், நாடு வளர்ச்சி அடையும். வரிகுறித்த சந்தேகங்களுக்கு, ஜிஎஸ்டி., இணையதளத்தில், தெளிவாக விளக்கம் தரப்பட்டு உள்ளது. மேலும், சந்தேகங்கள், புகார் களை, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply