முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக் குறைவாகப் பேசியவர் நாஞ்சில்சம்பத். இப்போது பிரதமரையும் பாஜக தலைவர்களையும் தரக்குறைவாகப் பேசிவருகிறார் என பாஜக தேசியசெயலர் எச்.ராஜா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், " தினகரன் அணியைசேர்ந்த நாஞ்சில் சம்பத், பிரதமரையும், பாஜக தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.

இதை அவர் நிறுத்தவேண்டும். இப்படியே தொடர்ந்தால், அவர் சொந்த ஊருக்குள்கூட வர முடியாத நிலை ஏற்படும். வைகோவுடன் இருந்தபோது, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் இவர். அ.இ.அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், தினகரனை கட்சியில்இருந்து நீக்கியுள்ளனர். இதனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றவேண்டும் என கோரியுள்ளனர்.

அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரமுடியும். முதல்வரை மாற்றுவது என்பது, கட்சியில் எடுக்கவேண்டிய முடிவு. இதை மாநில ஆளுநரும் தெளிவுபடுத்தி உள்ளார். ஒரு கட்சியில், 50 சதவீத உறுப்பினர்கள் வெளியேறினால்தான், அது பிளவாக கருதப்படும். அல்லாத பட்சத்தில், கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். " என்று தெரிவித்தார் எச். ராஜா.

Leave a Reply