டெல்லியில் அனாஜ் தானியமண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒருதொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து பற்றிய தகவல்அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வாகனங்களில்இருந்து தீக்கொழுந்துகளுடன் எரிந்துகொண்டிருந்த அந்த கட்டிடத்துக்குள் முதல் வீரராக நுழைந்த ராஜேஷ் சுக்லா உள்ளே சிக்கி உயிருக்கு போராடிய 11 பேரை வெளியே தூக்கிவந்து காப்பாற்றியுள்ளார்.

இந்த மீட்பு பணிகளின் போது தனது காலில் ஏற்பட்ட காயத்தைப்பற்றி பொருட்படுத்தாத அந்த உண்மையான ‘ஹீரோ’ மீட்புபணிகளின் இறுதிக்கட்டம்வரை அங்கேயே இருந்து பலரை வெளியேற்றுவதற்கு உதவிசெய்துள்ளார்.

அவரது கடமையுணர்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள டெல்லி எரிசக்தி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தவீரரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதை தொடர்ந்து, தீயணைப்புபடை வீரர் ராஜேஷ் சுக்லாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுமழை பொழிந்து வருகிறது.

Comments are closed.