தஞ்சை பெரியகோவிலில் நாளை (பிப்.5), கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா, 23 ஆண்டுகளுக்குபின், நாளை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையை காண, 1ம் தேதி முதல், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கும்பாபிஷேக விழாவைகாண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வர துவங்கிஉள்ளதால், தஞ்சை விழாக்கோலம் பூண்டுஉள்ளது.

நாளை அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாம்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸ்ஹூதி ஆகியவை நடைபெறவுள்ளது. காலை, 7:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், க்ரஹப்பீரிதி, 7:25 மணிக்கு, திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம்; 10:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

கோவிலுக்குவரும் பக்தர்களுக்கு மேலவீதி, வடக்குவீதி ஆகிய இடங்களில், மூன்று திருமண மண்டபங்களில் காலை, மாலை சிற்றுண்டியும், மதியம் உணவும் வழங்கப்படுகிறது. அதேபோல், சீனிவாசபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிவாச்சாரியார்களுக்கும், மேலவீதியில் உள்ள ஒருதிருமண மண்டபத்தில் ஓதுவார்களுக்கும் தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது.

இந்த உணவு மாதிரிகளை, உடனுக்குடன் சோதனைசெய்ய, 22 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை நகரில், 11 இடங்களில், பக்தர்கள் இளைப்பாறும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மோர், பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது.

Comments are closed.