தனதுநாட்டு வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானைச்சேர்ந்த பயங்கரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்நடத்தியது. இதையடுத்து, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக இந்திய விமானங்கள் பறக்க அனுமதியில்லை என்று பாகிஸ்தான் கூறிவிட்டது.

இதுதொடர்பாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரும், செயலருமான நஸ்ரத், விமானப் போக்குவரத்துத் துறை நிலைக் குழுவிடம் கூறுகையில், எல்லைப் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை திரும்பப் பெறுமாறு இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம். அதுவரை, இந்திய விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இதை இந்திய அதிகாரிகளிடமும் தெளிவுப்படுத்தி விட்டோம்’ என்றார்.

கடந்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்ற விமானத்துக்கு மட்டும் பாகிஸ்தான் அரசு தனது வான் எல்லையை பயன் படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. எனினும், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான் எல்லையை அப்போது பயன்படுத்த வில்லை.

இந்த நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமானபோக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயணநேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவாகிறது என இந்திய நாடாளுமன்றத்தில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார்.

பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனதுவான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவந்த நிலையில்,  பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையம் விமானப்படையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  இந்திய விமானங்களின் அனைத்து வகையான சிவில் போக்கு வரத்திற்கும் பாகிஸ்தான் வான்வெளி திறக்குமாறு கூறப்பட்டுபள்ளது.

இதையடுத்து நள்ளிரவு 12.41 மணிக்கு தனது வான் எல்லையை இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் விரைவில் பயணிக்கத் தொடங்கும் எனத்தெரிகிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டு வந்த பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும்.

Comments are closed.