தமிழகத்தில் இந்திமொழியை கற்றுக்கொடுக்க கோரி மாணவர்கள் போராடும்காலம் வெகுதொலைவில் இல்லை என்றும், விரைவில் இந்திக்கு ஆதரவாக அவர்கள் போராடும்சூழல் உருவாகும் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், அரசியல் ரீதியாக காங்கிரஸின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மாக்குவதே பாஜகவின் இலக்கு எனத் தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக.,வுடனான பாஜகவின் கூட்டணி சுமூகமாக உள்ளதாகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்த அதிமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் டிசம்பர் மாதத்துக்குள் நடத்தப்படும் வாய்ப்புள்ளது. அதிலும் அதிமுக.,வுடன் கூட்டணிதொடரும். தமிழக பாஜகவில் தற்போது 36 லட்சமாக தொண்டர்கள் உயரும் அளவுக்கு கட்சி வளர்ந்துள்ளது.

அகில இந்தியளவில் பாஜக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இது டிசம்பர் மாத இறுதிக்குள் முடிந்து விடும். அதைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு புதிய மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றார்.

Comments are closed.