தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று  பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு தரிசனம் செய்யவந்த பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், ஆளும்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக கட்சியிலிருந்து ஒவ்வொருவராக வெளியே செல்கின்றனர். கர்நாடகத்திலும், மற்ற மாநிலங்களிலும் யாரையும் இழுக்கவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லையென்றால் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். தமிழகத்துக்கு எந்தத்திட்டமும் வரக்கூடாது என்றால் தமிழகம் எப்படி முன்னேற முடியும்? சிலதிட்டங்கள் மீது கருத்துவேறுபாடு இருந்தால் கேட்டு விளக்கம் பெறலாம்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் மத்திய அமைச்சர்கள் கொண்டுவரவில்லை. மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சிதம்பரம் எந்த திட்டத்தையும் கேட்டுப்பெறவில்லை. தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை அடையாளம் காண வேண்டியது இன்றைய காலகட்டமாகும்.

கடந்த 5 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  அரசு தமிழகத்துக்கு எல்லா துறைகளிலும் என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது என்பதை பட்டியலிடத் தயாராக இருக்கிறேன். திமுக- காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியைவிட பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிகப்படியான நிதியை தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களை அரசுப் பள்ளிகளிலும் கற்றுத்தர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுக்கோள் என்றார் அவர்.

Comments are closed.