தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று தொழில்வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், இது தொடர்பாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தமிழக அரசு கலந்தாலோசித்துச் சிறப்பான யுக்திகளை கொண்ட தொலை நோக்குத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு இத்திட்டத் திற்கான யோசனையை மாநில அரசு உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல்செய்து வருவதாகவும் அவற்றைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்தநிகழ்ச்சியில் பேசிய மாநில தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாநிலத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்பூங்கா அமைக்க மத்திய அரசு உதவ வேண்டு மென்று கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply