மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான நாகரிகம் கொண்ட நாட்டில் பழங்கால நடைமுறைகள் நம்பிக்கை என்ற பெயரில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரலாம். சபரிமலை தெய்வத்தை பொறுத்தவரை நம்பிக்கை கொண்டவர்களிடம் பலமான வாதங்கள் உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுவதன் மூலம் தான், செல்ல கூடாத பாதையில் சுப்ரீம் கோர்ட் மிதித்து செல்கிறது என்றே பொருள்.

சபரிமலை கோவிலின் 18 படிகளை அனைத்து வயது பெண்களும் கடந்து செல்லலாம் என்ற தீர்ப்பை அய்யப்ப பக்தர்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர் என்பதே இதில் உள்ள முக்கிய முரண். பெண் சமூக ஆர்வலர்களை தவிர பிற பெண்கள் சபரிமலைக்கு செல்ல மறுத்து வருகின்றனர் என்றே தகவல்கள் வருகின்றன. அவர்கள் சபரிமலை அய்யப்பனின் பிரம்மச்சரியத்தையும், பூஜை நடைமுறைகளையும் மதிக்கின்றனர். அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்று நம்புகின்றனர்.

 

 

நம்பிக்கையே முக்கியம்:


இந்த விவகாரத்தில் நம்பிக்கை தான் முக்கியம். ஆனால், பெண்களின் மாதவிலக்கை இக்கோவிலுடன் தொடர்புபடுத்தி தவறாக விவாதிக்கப்படுகிறது. அந்த வாதத்தை கண்டிப்பாக தூக்கி எறிய வேண்டும். நீதிமன்றத்தின் முன்பு இருந்த பிரச்னை அய்யப்பனின் பிரம்மச்சரியம் தான்.

சபரிமலை அய்யப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சாரத்தில் மிகவும் கடினமான விரதத்தை அய்யப்பன் பின்பற்றி வருகிறார். அதுபோன்ற நிலையில் அவர் பெண்களிடம் இருந்து விலகி இருக்கிறார். நாட்டில் பிற அய்யப்பன் கோவில்கள் உள்ளன. அங்கு அய்யப்பன் பிரம்மச்சரிய விரதத்துடன் இல்லை. அந்த கோவில்களுக்கு பெண்கள் செல்ல கட்டுப்பாடுகள் இல்லை. சபரிமலையை பொறுத்தவரை அய்யப்பனுக்கு தான் கட்டுப்பாடுகள்.

அவரது தவத்துக்கு இடையூறு ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக பெண்கள் தமக்கு தாமே கட்டுப்பாடு ஏற்படுத்தி கொண்டு விட்டனர். 10 வயது வரை பெண்கள் குழந்தைகளாக கருதப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல் தாயாக கருதப்படுகின்றனர். அந்த கட்டுப்பாடுக்கும் பெண்களின் மாத விலக்குக்கும் சம்பந்தம் இல்லை. நீதிபதி சந்திரசூட் தலைமையில் பெரும்பான்மையான நீதிபதிகள் சபரிமலையில் உள்ள கட்டுப்பாட்டை மாதவிலக்குடன் தொடர்புபடுத்தி, அது ஒரு தீண்டமை என்று கருதி தீர்ப்பு வழங்கி விட்டனர். சபரிமலையில் மட்டும் தான் கட்டுப்பாடு உள்ளது; அதுவும் மாதவிலக்குடன் எந்த தொடர்பும் இல்லாதது என்பதை நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை.

அரசியல் சட்ட சிக்கல் வரலாம்


எனினும், இதுபோன்ற விஷயங்கள் நம்பிக்கைக்குரியவை. நவீனவாதிகள் அவற்றை அர்த்தமற்ற சடங்குமுறை என்று நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால், சமூக ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு ஆட்பட்டு, நம்பிக்கைக்குரிய விஷயங்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் அல்லது, 'அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட உரிமை உள்ளது. குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தில் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத வரை, அதில் தலையிட தேவையில்லை. மத பழக்க வழக்கங்களை, சமநிலைக்கான உரிமை என்ற அடிப்படையில் மட்டும் சோதனை செய்யக்கூடாது. மதரீதியான சடங்குகள் குறித்து கோர்ட் முடிவு செய்ய தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என, நீதிபதி இந்து மல்கோத்ரா அளித்த தீர்ப்பை புறக்கணித்தால் அரசியல் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம்.

இந்திய சமூகம் 5,000 ஆண்டுகள் பழமையானது. அதன் நம்பிக்கையை புறக்கணித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஒரு குறிப்பிட்ட தெய்வம் தொடர்பாக பின்பற்றி வரும் மதிப்புக்குரிய நடைமுறையை தூக்கி எறிந்தது துரதிருஷ்டவசமானது. இந்த பிரச்னை, அறநெறி, சம உரிமை அல்லது அடிமை தளத்தில் இருந்து மீட்பது தொடர்பானது அல்ல. ஒரு சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத மத நம்பிக்கைக்கு உரியது. அந்த மத நம்பிக்கையை சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல் மற்றும் விதவை கொடுமை போன்ற கொடூர நடைமுறைகளுடன் தொடர்புபடுத்த கூடாது. அவை சமூக கொடூரங்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியவை.

ஆபத்தை விளைவிக்கும்

சபரிமலை என்பது ஒரு தெய்வம் குறித்து நம்பக்கூடிய கதை. அதை பின்பற்றலாம் அல்லது பின்பற்ற வேண்டாம் என்ற சுதந்திரம் உள்ள கதை. அந்த மத நம்பிக்கையை ஏன் தகர்க்க வேண்டும்? வரும் காலங்களில் மத நம்பிக்கையை எதிர்த்தும், ஆதரித்தும் ஏராளமான வழக்குகள் வருவதற்கு காரணமாக இந்த தீர்ப்பு அமைந்து விடும் ஆபத்து உள்ளது. தவிர்க்க வேண்டிய விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால், ஒவ்வொரு மத நம்பிக்கை குறித்து பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்ப கூடிய பாதிப்பு ஏற்பட்டு விடும் என நீதிபதி இந்து மல்கோத்ராவே கூறியுள்ளார். அப்படி ஒரு பேரழிவை சந்திக்க நாடும், நீதிமன்றங்களும் தயாராக உள்ளனவா? அது சமூக கட்டமைப்பையே சீரழித்து விடும் நிலையற்ற பாதையாகவே இருக்கும்.
 

சபரிமலை விஷயத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் போது இந்த விஷயங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் நவீன ஜனநாயகத்தில் இருந்து இந்தியா மாறுபட்டது. நமது சமூகம் மாறுபட்டது. அந்த உண்மைகளை புறக்கணிப்பது ஆபத்தையே விளைவிக்கும். 

 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மனோஜ்குமார் சொந்தாலியா எழுதிய கட்டுரை

Leave a Reply