தாமிர பரணி படித்துறையில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்படி புஷ்கர விழாவுக்காக தைப்பூச மண்டப படித்துறை பகுதியை சுத்தப்படுத்தும் பணி பாஜ சார்பில் நேற்று நடந்தது. இதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது: 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிர பரணி புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாட மடாதிபதிகள், துறவிகள், கோயில் பிரதிநிதிகள் பெரும்முயற்சி எடுத்து வருகின்றனர்.


பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தீர்த்த கட்டங்களில் புஷ்கர விழா நடக்கிறது. மகா புஷ்கரவிழா, விருச்சிக ராசியில் நடக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் ராசியாகும். எனவே, புஷ்கர விழாவில் பாஜகவினர் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட சேவைகளை கூடுதலாகவழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நெல்லையில் குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறைகளில் பாதுகாப்பு கருதி புஷ்கர விழாவை நடத்த அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தடைவிதித்துள்ளது.

தைப்பூச மண்டபத்தில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக உற்சவர் சிலைகள் வைத்து பூஜை செய்வதற்கு அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் நெல்லையப்பர் கோயில் உற்சவர் தைப்பூச தீர்த்தவாரி இங்குதான் நடைபெற்று வருகிறது. நெல்லையில் நடந்த பொருட்காட்சியில் அறநிலையத்துறை சார்பில் நெல்லையப்பர் கோயில் உற்சவர் சிலையை வைத்தது ஆகம விதிமுறை மீறல் இல்லையா? தாமிரபரணி ஆற்றங்கரை மண்டபங்கள் பலகீனமாக உள்ளதாக அறநிலையத் துறை தவறான தகவல்களை தெரிவிக்கிறது. இதுகுறித்து பொதுப் பணித்துறை மூலம் ஆய்வு செய்யப்பட வில்லை. எனவே தமிழக அரசு தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை படித்துறைகளில் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த அனுமதியளிக்க வேண்டும். மேலும் இதனை அரசு விழாவாக நடத்த முன்வருவதோடு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும். மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply