தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பணிக்குழுவை மத்தியகல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று அமைத்தார்.

உயர்கல்வி செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பணிக்குழு, பல்வேறு பங்குதாரர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து தன்னுடைய அறிக்கையை ஒருமாதத்தில் வழங்கும்.

தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் அமைச்சரால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உயர்கல்வி செயலாளர் அமித்காரே, ஐஐடி இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக்கூட்டம் நடைபெற்றது.

மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளை தங்களது தாய்மொழிகளிலேயே மாணவர்கள் கற்பதற்கான பிரதமரின் லட்சியத்தை அடைவதற்கான பயணத்தில் ஒருமுன்னேற்றமே இன்றைய கூட்டம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

எந்த மொழியும் எந்த மாணவரின் மீதும் திணிக்கப்படாது என்று அமைச்சர் கூறினார்.

Comments are closed.