தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்தநிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்இருந்து வி.பி. துரை சாமியை நீக்கி அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். துரைசாமிக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி. துரைசாமி சில தினங்களுக்கு முன்பாக பாஜகவின் தமிழக தலைவர் எல். முருகனை சந்தித்துப் பேசினார். இந்த சம்பவம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மரியாதை நிமித்தமாக தன்னைசந்தித்து, வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்ததாக பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று துரை சாமியை கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

துணைப் பொதுச்செயலாளராக பொறுப்புவகித்து வரும் வி.பி. துரை சாமி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக, திமுக துணைப் பொதுச்செயலாளராக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொறுப்பு நீக்கப்பட்டுள்ள துரைசாமி, தன்னிடம் ஏதும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக கட்சியில் சதி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.