வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் பாஜக 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, அந்தமாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் கட்சியாக உள்ள திரிபுராவில் 116 ஜில்லா பஞ்சாயத்துகளில் 114 இடங்களையும், 419 பஞ்சாயத்து சமிதியில் 411 இடங்களையும், 6,111 உள்ளாட்சி உறுப்பினர் இடங்களில் 5,916 இடங்களையும் பாஜக கைப்பற்றி, அமோகவெற்றி பெற்றது.  காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிபுரா மக்கள் முன்னணி (ஐ) ஆகிய கட்சிகளுக்கு மிகக்குறைவான இடங்களிலேயே வெற்றி கிடைத்தது.

இதையடுத்து, சுட்டுரையில் (டுவிட்டர்) பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், திரிபுராமக்கள் பாஜகவின் வளர்ச்சித் திட்டங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாயத்துத் தேர்தலில் மக்களின் முழுமையான ஆசிர்வாதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் திரிபுரா மாநிலத்தின் கிராமப்பகுதிகள் வளர்ச்சியை நோக்கிய மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க இருக்கின்றன. கிராமமக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படவுள்ளது.

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தான் இந்தவெற்றி சாத்தியமானது. திரிபுராவில் அரசியல், பொருளாதார மாற்றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டுவரும் தொண்டர்களுக்கு எனது பாராட்டுகள். நாம் சரியான முறையில் முயற்சி மேற்கொண்டால், அனைத்தும் சாத்தியமாகும் என்பதை இந்தவெற்றி மூலம் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.

Comments are closed.