திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து , அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மஹாதீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை பற்றிய 30 தகவல்கள்

1. திருவண்ணாமலை தலத்தைச்சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்திகிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதிகொடுக்கிறார்.

4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் 9-வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

6. திருவண்ணாமலை ஈசனை ”தீப மங்கள ஜோதி நமோ நம“ என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

8. திருவண்ணாமலை தலத்தில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

9. மகா சிவராத்திரி தொடங்கியது இந்த தலத்தில்தான் என்று புராணங் களில் குறிப்படப்பட்டுள்ளது.

10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும்போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ணபந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக வந்த சிவாலயத்தி லும் ஜோதி வழிபாடு நடப்பதில்லை.

12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

15. கார்த்திகை தீப திருவிழாவில் ஒருநாள் அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள். அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பெ£ருள் ஒன்றே என்பதை ”இறைவன் ஒருவனே“ என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப் படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று மகா தீபத்தை ஏற்றுவார்கள்.

18. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு (2018) சுமார் 25 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், ”அண்ணாமலை யாருக்கு அரோகரா“ என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
”இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்“- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

21. பஞ்சபூத தலங்களில் இது நெருப்புக்குரிய தலம்.

22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

23. பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புதிய புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.

24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

25. மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்ச மான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்றவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இம்மரத்தின் கிளைகளில் கட்டு வார்கள். அவர்களுடைய வேண்டு தல் நிறைவேறியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித் தொட்டில்களை நீக்கி விட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

26. கோவிலுக்குள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலது பக்கம் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியை காணலாம். இது ரமணர் தலம் செய்த இடம். அங்கு அவசியம் தரிசிக்க வேண்டும்.

27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்டலிங்கங்கள் உள்ளன.

29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

30. வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது.

Comments are closed.