நல்லவிலை கிடைப்பதால் இனிவரும் ஆண்டுகளில் தென்னை பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்வகிக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

உலக அளவில் தென்னைப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.2,044 கோடி மதிப்புக்கு தென்னைப்பொருள்கள் உற்பத்தி செய்யப்பட நிலையில் அதன் ஏற்றுமதி ரூ.1,450 கோடியாக இருந்தது.

2015-20-ஆம் ஆண்டுக்கான வெளியுறவு வர்த்தக கொள்கையில் தென்னைப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி மதிப்பில் 5% வரை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தென்னைப்பொருள்கள் குறைவான விலையில் நிறைந்த தரத்துடன் இருப்பதால் வரும் ஆண்டுகளில் இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டுவரை தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த நாம், நடப்பு நிதி ஆண்டிலிருந்து அதனை மலேசியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதிசெய்ய தொடங்கியுள்ளோம். முதல் முறையாக தற்போதுதான் அதிகளவிலான உலர்ந்த தேங்காய்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்துள்ளோம். தேங்காய் உற்பத்தியில் மட்டுமன்றி, தென்னைப்பொருள் ஏற்றுமதி மற்றும் தேங்காய் பதப்படுத்துதலிலும் சர்வதேசளவில் இந்தியா முதலிடம் வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தென்னைவேளாண் சாகுபடியில் சிறப்பாகச் செயல்பாட்ட 14 விவசாயிகளுக்கு தேசியவிருதை வழங்கி மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கௌரவித்தார்.

Leave a Reply