பிரதமர் நரேந்திர மோடியை  சித்தரித்து எடுக்கப்பட்ட ‘பி.எம்.நரேந்திர மோடி’ படம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளுக்கு அடுத்தநாள் இந்தியா முழுவதும் திரையிடப் படும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இவர் ‘மேரி கோம்’, ’சர்ப்ஜித்’ ஆகிய சுய சரிதைப் படங்களை இயக்கியவர். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜீத்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர். ’ஆயுத எழுத்து’ படத்தின் இந்தி ரீமேக்கில் மணிரத்னம் இயக்கத்திலும் நடித்துள்ளார்.

இந்தப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப் பட்டதாகவும் தேர்தல் ஆதாயத்துக்காக காட்சிகள் வைக்கப் பட்டுள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதையடுத்து படத்தைவெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பதை முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதோடு படத்தை, தேர்தல் ஆணையத்திற்கு திரையிட்டுக் காட்டவும் தயாரிப்பாளருக்கு உத்தர விட்டது. படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், அதை இப்போது வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு சீலிட்ட உறையில் அறிக்கையாக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என கூறி, தேர்தல் முடியும்வரை பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply