தொழில்பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தைவழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தொழில்பயிற்சிகளை ஐடிஐ-க்கள் அளித்து வருகின்றன. எனினும், அங்கு பயிற்சியைமுடித்த மாணவர்கள், பள்ளிகளில் படிப்பைமுடித்த மாணவர்களைப் போல கல்லூரிகளில் சேரமுடியாத நிலை உள்ளது.


இந்த நிலையில், ஐடிஐ-க்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குரிய அந்தஸ்தை அளிக்கலாம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் திறன்மேம்பாடு – தொழில் முனைவு நலத்துறை
அமைச்சகம் பரிந்துரைத்தது. அதனை ஏற்றுக்கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற ஒரு தனிவாரியத்தை, ஐடிஐ-க்களுக்காக அமைக்க முடிவு செய்துள்ளது.


அவ்வாறு உருவாக்கப்படும் புதிய வாரியம், பள்ளிகளில் அரசுத்தேர்வுகள் நடத்தி வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையாக, ஐடிஐ-க்களில் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும்.இந்த சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்கள், 10-ஆவது மற்றும் 12-ஆவது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இணையாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரமுடியும்.அதற்காக, சிபிஎஸ்இ, பல்கலைக்கழக மானிய ஆணையம், மாநில கல்விவாரியங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.


இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாடெங்கிலும் உள்ள 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐடிஐ-க்களில் பயிலும் மாணவர்கள் பலனடைவார்கள் என்று அரசுவட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply