‘இந்திய பொருளாதாரம், விரைவில் மந்த நிலையிலிருந்து மீண்டு, வளர்ச்சி பாதையில் பயணிக்கும்; அதற்கான எல்லா நடவடிக்கை களையும் அரசு மேற்கொண்டு வருகிறது,” என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியதொழில் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்வதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாட்டில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த சிலஆண்டுகளில், 100 லட்சம்கோடி செலவிடப்பட உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, 25 லட்சம்கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக, இந்திய பொருளாதாரம், 2024க்குள், 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும். பொருளாதார மந்தநிலை குறித்து, நம்மை சுற்றி நடக்கும் விவாதங்களை பற்றி தெரிந்துவைத்துள்ளேன். இதற்கு எதிராக, எந்தகருத்தையும் தெரிவிக்க போவதுல்லை. இதுபோன்ற விஷயங்களில், நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பதுதான் சரியாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், ஏற்றத்தாழ்வு இருப்பது, கடந்தகாலங்களிலும் நடந்துள்ளது. ஆனால், பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதற்கான சக்தி, நமக்கு உண்டு. விரைவில், நம்பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும்.

பொருளாதார வளர்ச்சிவிகிதத்தை அதிகரிக்க, பல்வேறு நிறுவனங்களும், அதிகளவில் முதலீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் குற்றங்களின் மீதான கடுமையை குறைக்கும்வகையில், கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம், பல்வேறு நிறுவனங்களும் நம் நாட்டில் மிகவும் எளிதாக வர்த்தகம்செய்யும் நிலை உருவாக்கப்படும். நிறுவனங்கள் எடுக்கும் நேர்மையான முடிவுகள் மீது, பொருத்தமற்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது.

இந்த விஷயத்தில், இன்னும் சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இது போன்ற நடவடிக்கைகள், நிறுவனங்களின் பாதுகாப்புக்கும், அவை அதிக முதலீடு செய்வதற்கும் உதவும். வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், எந்தவித பயமும் இன்றி, துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும்.எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், நாம் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்து உள்ளோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தவிஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜன்டுகளாக நாம் செயல்படுவதாக, சிலர் கூறுகின்றனர். ஆனால் நாம், 130 கோடி மக்களின் ஏஜன்டாக செயல் படுகிறோம். நம்மைப் பற்றி குறை கூறுபவர்களை முறியடித்துதான், இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Tags:

Comments are closed.