தூய்மைபாரதம் திட்டத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பை பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்று கொண்டார்.


பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 67-வது பிறந்தநாள் நாடுமுழுவதும் கடந்த இருநாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேசம் மாநில அரசும் மோடியின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறது.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில்  வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை பல்வேறு இடங்களில் தூய்மையை வலியுறுத்தும் தீவிரவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நாடுமுழுவதும் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தும் பிரசாரங்கள் மும்முரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல நடிகர்களை வைத்து தூய்மை மற்றும் சுகாதாரம்தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் முனைப்புகாட்ட தொடங்கியுள்ளது.

இதன் ஒருகட்டமாக, தூய்மை பாரதம் திட்டத்தில் பங்கேற்குமாறு பிரபல மலையாள நடிகர் மோகன் லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தார்.இது தொடர்பாக, மோகன்லாலுக்கு பிரதமர் மோடி எழுதியகடிதத்தில் மோடி கூறியிருந்ததாவது:

மிகவும் பிரபலமானவர் என்ற முறையில் மக்களின் வாழ்வில் சாதகமான முறையில் உங்களால் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்பதால் தூய்மை பாரதம் திட்டத்துக்காக சிறிதுநேரத்தை அர்ப்பணிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த அழைப்பை மோகன்லால் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளதாவது:

பொறுப்புள்ள குடிமக்கள் என்ற முறையில் நாடுதான் நமதுவீடு. வீடுதான் நமது அடையாளம் என்பதை நாம் புரிந்துகொண்டு அதன்படி நடந்து பெருமைப்படவேண்டும்.

நாம் அனைவரும் தூய்மையான சூழலில் வாழ பழகிக்கொண்டால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் நம்முடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். இன்றிலிருந்து நமது நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நாம்தீர்மானித்தால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த ஆண்டுகளைவிட சிறப்பானதாக அமையும்.

தூய்மையான புதியநாட்டை உருவாக்கிட தூய்மையே சேவை என்ற உன்னத நோக்கத்துக்காக என்னை அர்ப்பணித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply