பிரதமர் நரேந்திர மோடியின் வெளி நாட்டுப் பயணங்களால் ஏற்பட்டுள்ள நன்மைகளை கணக்கிட முடியாது என்று மத்தியதகவல் ஆணையத்திடம் (சிஐசி), பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்த விவரங்களை அளிக்குமாறு கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக அளித்த விளக்கத்தில், இந்தக் கருத்தை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


 இதுகுறித்து மத்திய தகவல் ஆணையர் ராதாகிருஷ்ண மாத்துர் வெளியிட்ட ஆணைக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:


 பிரதமரின் வெளிநாட்டுப்பயணம் தொடர்பான மனுவுக்கு, எதிர்வாதியான பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், அந்தப்பயணங்களால் ஏற்பட்டுள்ள நன்மைகளை எண்ணிக்கையாகக் கணக்கிடமுடியாது எனவும், எனவே, அது தொடர்பான ஆவணப் பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


 மேலும், வெளிநாட்டுப் பயணங்களின் போது பிரதமர் எத்தனை மணிநேரம் செலவிட்டார் என்ற விவரமும் ஆவணப்பதிவு செய்யப்படவில்லை. எனவே, அந்தத் தகவல்களையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.


 பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்தவிவரங்கள் தங்களது அதிகாரபூர்வ வலைதளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் அலுவலகம், அந்தப் பயணங்களுக்கு இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (சிஎஃப்ஐ) பணம் செலவிடப் படுவதாகத் தெரிவித்துள்ளது என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 இந்தியத் தகவல் ஆணையத்திடம் கீர்த்திவாஸ் மண்டல் கடந்த ஆண்டு ஜூன்மாதம் தாக்கல் செய்திருந்த மனுவில், பிரதமரின் நரேந்திரமோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்தும், அந்த பயணங்களுக்கு எந்தநிதியிலிருந்து பணம் செலவிடப்படுகிறது என்பது குறித்தும் தகவல் கோரியிருந்தார்.


 மேலும், பிரதமரின் பயணங் களால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்தும் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தமனுவில் அவர் கோரியிருந்தார்.

Leave a Reply