”பெரிய ஓட்டல்களில், ‘ஆன்லைன்’ விற்பனை, வினியோகவசதி உள்ளதுபோல், நடைப்பாதை வியாபாரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள், தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதற்காக, கடந்த ஜூன், 1-ம் தேதி, ‘பிரதமமந்திரி சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி’ என்ற பெயரில் புதியதிட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில், 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகள் இணைந்துள்ளனர்.இதில், தகுதியுடைய, 2.45 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள், இணைய தளம் வாயிலாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, 140 கோடி ரூபாய் நிதியுதவியை, 1 லட்சத்து, 40 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த வியாபாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:இந்த திட்டம் துவங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகளை இணைந்துள்ள, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு பாராட்டுகள்.மத்திய பிரதேச மாநிலத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். இந்ததிட்டம் மூலம், நடைபாதை வியாபாரிகளின் வாழ்வில் புதியதுவக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், நவீன தொழில்நுட்ப வசதியையும், நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திதரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய ஓட்டல்களில், ஆன்லைன்வழியாக பொருட்களை விற்கவும், வினியோகவும் செய்யவும் வசதிகள் உள்ளன. அதேவசதி, நடைபாதை வியாபாரிகளுக்கும் ஏற்படுத்தி தரப்படும். வியாபாரிகள் முழுஒத்துழைப்பு அளித்தால், இந்த வசதி விரைவில் கிடைக்கும்.கொரோனா பரவலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். அவர்கள் வேலையிழந்து, தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.இதை உணர்ந்த அரசு, அவர்களுக்கு ரேஷன் பொருட்கள்வழங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பல வகையில் உதவிகள் செய்தது.

இந்த நிதிதிட்டத்தில் உள்ள விதிகள், மிக எளிமையானது. தனியாரிடம் கடன் வாங்கி, கடும்வட்டி செலுத்தி வந்த வியாபாரிகளுக்கு, அதிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.இந்ததிட்டத்தில், வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான வட்டி, மிக, மிக குறைவு, கடனை முறையாக செலுத்தினால், மேலும் பல வசதிகளை பெற முடியும்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, நாட்டில் வறுமையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், கடந்த, ஆறு ஆண்டுகளில், வறுமையை ஒழிக்க திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்போல், முன்பு எடுக்கப்படவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.