நாடுமுழுவதும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் பயன் பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கேழ்வரகு, சாமை, தினை, வரகு, மக்காச் சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களில், பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு, நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், மலைப்பிரதேசங்கள் மற்றும் வறட்சியான நிலப்பகுதிகளில் மட்டுமே, அவை பயிரிடப்படுவதால், தேவை பூர்த்தி செய்யப் படுவதில்லை. சிறுதானியங்கள் சாகுபடிக்கு, வேளாண் துறையினர், ஏற்கனவே சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது, நாடுமுழுவதும், சிறுதானியங்களின் சாகுபடி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலகம் முழுவதும், 2016 சர்வதேச பருப்பு ஆண்டாக கடைபிடிக்க பட்டது. இதையொட்டி, மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தியதால், நாடுமுழுவதும், பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது; விலையும் கணிசமாக குறைந்துள்ளது. 2018ல், சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக, ஐ.நா., சபை அறிவிக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அதிகரிக்கும். அவற்றை சாகுபடிசெய்யும் இந்திய விவசாயிகளுக்கு, அதிக வருவாய் கிடைக்கும். எனவே, சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான உதவிகள் குறித்த விபரத்தை தரும்படி, மத்தியஅரசு கேட்டுள்ளது. இதுகுறித்த நிதி ஒதுக்கீடுகள், மத்தியபட்ஜெட்டில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply