மத்திய அரசின் தீனதயாள் உபத்யாயா கிராம்ஜோதி யோஜ்னா தி்ட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வகுத்த தீனதயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மின்வசதி அளி்க்க ரூ. 75,893 கோடி ஒதுக்கப் பட்டது. இதன்படி, 18,452 கிராமங்கள் மின்வசதிபெற்றது. இத்திட்டத்தின் கீழ், மேலும் 1275 கிராமங்கள் மின் வசதி பெற திட்டமிட்டு, தீன தயாள் உபத்யாய் திட்டத்துடன், மணிப்பூர் மாநிலத்தின் கிராமப்புற மின் மயமாக்கல் கழகமும் இணைந்து பணிகளை மேற்கொண்டது.

அரசின் துரிதமுயற்சியால், நாட்டின் அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்று வந்தநிலையில், மின்வசதி பெறாமல் இருந்த மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் உள்ள லீசாங்கிராமமும், 28ம் தேதி மாலை 05.30 மணியளவில் மின்வசதி பெற்றது. இதன்மூலம், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 5,97,464 கிராமங்கள் மின்வசதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரதமர்   பெருமிதம்

2015-ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி அனைத்து கிராமங்களுக்கும், இன்னும் ஆயிரம் தினங்களில் மின்வசதி ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். தீன தயாள் உபத்யாயா மற்றும் தீனதயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டங்கள் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நாடுமுழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், நிறைவாக நேற்று மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டம் லீசாங் என்ற மலைகிராமம் மின்வசதி பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது.  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் நேற்றைய தினம் வரலாற்று சிறப்புவாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்டதாக கூறியுள்ள மோடி, ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற உழைத்த அனைத்து ஊழியர்களையும் , அலுவலர் களையும் வணங்குவதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply