பிரதமர் பதவி தொடர்பாக எதிர்க் கட்சிகள் பகல்கனவு காண்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தமது சொந்த மக்களவைத் தொகுதியில் இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளை கூட வெல்ல முடியாதவர்கள், பிரதமர் பதவிக்கு கனவு காண்பது கேலிக்குரியது.

பள்ளியில் குறைவான மதிப்பெண்பெற்ற குழந்தை வீண் சாக்கு கூறுவதைப்போல், தேர்தலில் தோல்விநேரும் என்பதைத் தெரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும் குறைகூறி வருகின்றன.

தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள மக்களவைக்கான மூன்றுகட்ட தேர்தல்களிலேயே, எதிர்க்கட்சிகளின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

தோல்வியை ஏற்றுக்கொள்வதைத்தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.பயங்கரவாதம் மூலம் நமது நாட்டை பாகிஸ்தான் அச்சுறுத்திய போதெல்லாம், வெறும்கண்ணீர் மட்டுமே சிந்திய காங்கிரஸ், தற்போது ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறது.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் எதிரிகளுடன் போரிடுவதற்குத் தைரியம்வேண்டும். நாட்டுமக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது, இந்த காவலாளியின் (பிரதமர் மோடி) கடமை.

மத ரீதியாகவோ அல்லது ஜாதிரீதியாகவோ எவரையும் நான்
பாகுபடுத்தியதில்லை.

இராக்கில் 46 செவிலியர்கள் சிக்கிக்கொண்டபோது, அவர்களை மீண்டும் நாட்டுக்குக்கொண்டுவர பாஜக தலைமையிலான அரசு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டபோது, அவரைமீட்க உரிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்தது.

நமது நாட்டுத் திருமகள்களின் பாதுகாப்பில் இந்தக்காவலாளி எப்போதும் கவனம் கொண்டுள்ளார்.

பாஜக அரசின் கடும் நடவடிக்கைகளால், நாட்டில் மாவோயிஸ்டுகளின் செயல் பாடுகள் பெருமளவில் குறைந்து விட்டன. நக்ஸல்பாதித்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள், வன்முறையை  கைவிட்டு, தற்போது நாட்டின் வளர்ச்சிக் காக பணியாற்றிவருகின்றனர்.

ஜார்க்கண்டில் பழங்குடியினரின் நலனுக்காக ரூ.4,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்கள், பழங்குடியினரின் நிலத்தையும், வளங்களையும் சுரண்டுவதை பாஜக அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு கூட, இந்தியாவும் இதே போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களையே எதிர் கொண்டிருந்தது.

ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், அனைத்தும் மாறிவிட்டன. உலகில் எந்தமூலையில் இருந்தாலும், பயங்கரவாதிகள் அனைவரையும் இந்தக் காவலாளி எளிதில் கண்டுபிடித்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“பல்வேறு தருணங்களில் நான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களால்தான், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது’

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியை இந்தியாவைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் பார்க்கமுடிந்தது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தநிலையில், அந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலுக்கு யாரும் செவிமடுக்கவில்லை. ஆனால், தற்போது இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு சர்வதே நாடுகள் ஆதரவாக உள்ளன.

நான் எனது பதவிக் காலத்தில் முழு நேரத்தையும் வெளிநாடுகளுக்குச் செல்வதிலேயே கழித்துவிட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை விமர்சித்ததாக எங்கேயோ படித்த ஞாபகம். உண்மையில், எனது வெளிநாட்டு பயணங்களால் தான் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வலிமைக்கு உரியஅங்கீகாரம் கிடைத்துள்ளது.

பிரதமர் பதவி’க்கு ஆசை:  இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள், ஒவ்வொருவராக நாடு கடத்தப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் தொகை பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் இதற்கு முன்பு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

பிரதமர் பதவிக்கு ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். 20 முதல் 25 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட, இந்த நாட்டின் பிரதமராகி விடலாம் என்று கனவு காண்கின்றனர்.

விளம்பரம் தேடுகிறார்: தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தேர்தல் நேர்மையாக நடைபெறும் ஒரே காரணத்துக்காக, தேர்தல் ஆணையத்தின் மீது மம்தா அதிருப்தியில் இருக்கிறார்.

மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அபுதாபியில் ஹிந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலம் நடத்துவதில் பிரச்னை ஏற்படுகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்களை, மம்தா தனது திட்டங்களாகக் கூறி விளம்பரம் தேடிக் கொள்கிறார் என்றார் மோடி.

Leave a Reply