காங்கிரஸ் கட்சியின் தேர்தல்வாக்குறுதிகள் நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தேசத்துக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அவர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சுமார் 70 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தியிருந்தால், இந்த வாக்குறுதிகளுக்கான தேவை இப்போது எழுந்திருக்காதே? ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெறவுள்ளதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை குறைப்போம் என அக்கட்சி மறைமுகமாக அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், தேசத்துரோகச் சட்டத்தை நீக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது. பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள், இந்தியாவை துண்டாட நினைப்பவர்கள், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோரின் பாஷையில் காங்கிரஸ்கட்சி பேசுவது துரதிருஷ்டவசமானது என்றார் அவர்.

Leave a Reply